Ken Karunas: சினிமாவுக்கு வந்தாச்சு.. அடுத்து அப்பா பாணியில் அரசியலா? - கென் கருணாஸ் பதில்!
பேச்சி ஆவுடையப்பன் March 22, 2026 11:14 AM

உங்களுடைய அப்பா வழியில் சினிமாவைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் பதிலளித்துள்ளார். 

பிரபல நட்சத்திர தம்பதிகளான கருணாஸ் - கிரேஸ் தம்பதியினரின் மகனான கென் ரெட்டச்சுழி படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து ரகளபுரம், அழகு குட்டிச் செல்லம், அசுரன், வாத்தி, விடுதலை 2 என பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து யூத் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கி வெற்றிக் கண்டுள்ளார். அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி ஆகிய 3 பேர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதனால் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கென் பல தகவல்களை பகிர்ந்தார். அதன்படி, “எனக்கு இயக்குநராகும் ஆசை இல்லை. எனினும் அது இப்போது நிறைவேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் நல்ல நடிகராகவும், ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. சின்ன வயதில் இருந்தே அந்த ஆர்வம் இருந்தது. இருந்தாலும் அசுரன், விடுதலை, வாத்தி ஆகிய படங்களில் நான் ரொம்ப சீரியஸான கேரக்டர்களில் நடித்தேன். அதனால் என்னை தேடி அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் மட்டும் தான் வந்தது. அவை யாவும் நான் நடித்த படங்கள் மாதிரியே இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை. 

தொடர்ந்து இதே மாதிரி கேரக்டரில் நடிக்க முடியாது. ஜாலியாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்  ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எந்தவொரு இயக்குநரும் அப்படியான கதையுடன் என்னை அணுகவில்லை. அதனால் நாம் ஒரு படம் இயக்கி நம்மை பற்றி தெரிவிப்போம். அதைப் பார்த்து யாரிடமாவது அதுபோன்ற கதை இருந்தால் நம்மை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நினைப்பார்கள் என்ற ஐடியாவில் யூத் படம் பண்ணினேன். அடுத்து எந்தவொரு ஐடியாவும் இல்லை. சென்சார் போர்டு இந்த விவகாரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் சப்போர்டாக இருந்தார்கள் என கென் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் உங்கள் அப்பா கருணாஸ் அரசியல், சினிமா என இரண்டிலும் பயணப்பட்டு வருகிறார். நீங்கள் சினிமாவுக்கு வந்துட்டீங்க, எப்போது அரசியல் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதறிப்போன கென், “நான் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. எங்க அப்பா பார்த்து வாழ்ந்த வாழ்க்கையும், என்னுடைய வாழ்க்கையும் வேறு வேறு’ என தெரிவித்தார். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனவும் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.