தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பகுதியிலேயே கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தங்கள் கடையை அடைப்பதில் காவல்துறையுடன் இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் அன்றைய இரவே காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து விசாரணையின் பேரில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் குறித்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது இந்த வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்ளிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை, குறுக்கு விசாரணை உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி G.முத்துகுமரன் முன் இறுதியாக விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நாளை காலை நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.