ஐடி வேலையில் 'லைஃப் செட்டில்' என்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்.. 13 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா? கண்ணீர் விட்டு கதறும் ஐடி ஊழியர்.. வைரலாகும் ரெடிட் பதிவு..!!
SeithiSolai Tamil March 23, 2026 12:48 PM

ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 36 வயது மென்பொருள் ஊழியர் ஒருவரின் உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் QA நிபுணராகப் பணியாற்றி வந்த இவரை, எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏப்ரல் 1 முதல் வேலையை விட்டு நிற்குமாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்டுக்கு 8.9 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த இவர், தனது பெற்றோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வேறு ஊர்களுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் அதே நிறுவனத்தில் உழைத்திருக்கிறார். தற்போது திடீரென வேலை பறிபோனதால் செய்வதறியாது திகைக்கும் இவர், தனக்கு அடுத்த வேலை கிடைக்க யாராவது உதவுமாறு ரெடிட் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஊழியர்களைக் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகின்றன.

அனுபவம் வாய்ந்தவர்கள் முதல் புதியவர்கள் வரை அனைவரும் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒருமுறை வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது என்ற நிலை மாறி, எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்குத் தீர்வாக, ஐடி ஊழியர்கள் தங்களின் திறன்களை ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது மட்டுமே வேலையைத் தக்கவைக்க உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.