தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அதிக கட்சிகள் காரணமாக விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
திமுக கூட்டணிக்கு முன்னதாகவே அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில், கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கலாமே இருந்தது. இதற்கு, தங்களது கூட்டணிக்கு தவெகவை இணைக்கும் முயற்சியே காரணமாக கூறப்பட்டது. ஆனால், தவெக தலைவர் விஜய் இக்கூட்டணியில் இணையவில்லை.
இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இன்றைக்குள் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 234 இடங்களில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் எனவும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்ட பிறகு, அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தமாக, ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், அக்கட்சிகளுக்கும் இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.