மதுரையில் பரபரப்பு... தவெக நிர்வாகி மீது பெண் நிர்வாகியின் கணவர் புகார்: 26 லட்சம் மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டு!
அருண் சின்னதுரை March 24, 2026 07:18 PM

மதுரையில் தவெக-வில் பதவிக்காக பெறப்பட்ட 26 இலட்ச ரூபாய் பணத்தை தவெக நிர்வாகி S.R.தங்கப்பாண்டி தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக தவெக பெண் நிர்வாகியின் கணவர் காவல்துறையில் புகார் மனு.

தவெக நிர்வாகி மீது மோசடி புகார்
 
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், மதுரை தெற்கு மாவட்ட செயலாளருமான S.R.தங்கப்பாண்டி மீது தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி பெண் நிர்வாகி ஷர்மிளா சில வாரங்களுக்கு முன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் "தமிழக வெற்றிக் கழகத்தில் S.R.தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கி உள்ளார். கடன் பிரச்சினைகளை தீர்க்க S.R.தங்கப்பாண்டி பெண் நிர்வாகிகளிடம் பணம் வாங்கினார். என்னுடைய நகைகளை அடகு வைத்து S.R.தங்கப்பாண்டிக்கு பணம் கொடுத்துள்ளேன். வட்டி கட்ட முடியாமல் நகைகளை விற்று விட்டேன், ஒரு காலகட்டத்தில் முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்தேன், S.R.தங்கப்பாண்டியிடம் தயவு செய்து என்னுடைய பணத்தை பெற்றுத் தாருங்கள். S.R.தங்கப்பாண்டி மீது புகார் தெரிவித்து இருப்பதால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என தெரிவித்து இருந்தார்.
 
பணத்தை கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள்.
 
இந்நிலையில் ஷர்மிளாவின் கணவர் பாலாஜி மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி பேசுகையில் "தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி தருவதாக கூறி S.R.தங்கப்பாண்டி எங்களிடம் ஐ போன், சோபா, பிரிண்டர் வாங்கி உள்ளார். மேலும், S.R.தங்கப்பாண்டி மகன் சஞ்சய் ஜிபே எண்ணிற்கு அவ்வப்போது பணமும் அனுப்பி வைக்கப்பட்டது, இதன் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய் ஆகும், மேலும், தொழில் முதலீடு செய்யலாம் என 16 இலட்ச ரூபாயும் பெற்றுள்ளார். நிலத்தை அடமானம் வைத்து கொடுத்துள்ளதால் எங்கள் குடும்பம் கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இதனால் தான் என் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பணத்தை கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் என்னிடம் பேசி பிரச்னை எதும் செய்ய வேண்டாம் என கூறினார். எனக்கு என்னுடைய பணத்தை பெற்று தர வேண்டும். தமிழக வெற்றிக் கழக மேடையில் நிர்வாகிகளை ஏற்ற வேண்டும் என்றால் S.R.தங்கப்பாண்டிக்கு தலா 10,000 ரூபாய் பணம் தர வேண்டும். காவல்துறையில் புகார் அளிக்க கூடாது. ஊடகத்தில் பேட்டி அளிக்க கூடாது என என்னை மிரட்டுகிறார்கள்" என கூறினார். ஷர்மிளாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அரசியல் உள் நோக்கத்துடன் கூறப்பட்டவை என S.R.தங்கப்பாண்டி தெரிவித்துள்ளது” குறிப்பிடத்தக்கது.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.