தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இப்தார் நோன்பு என்கின்ற பெயரில் பரிசு பொருள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.
புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய், கடந்த 20ஆம் தேதி வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த ஆதவ் அர்ஜுனா என்பவர், இப்தார் நோன்பு என்கின்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் 500 லிருந்து 600 நபர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை அவர்களுக்கு வழங்கி உள்ளார். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகும், இதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம், மேலும் இதற்கு உண்டான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம்,
குறிப்பாக வாக்காளர்களை கவரும் வகையில் லஞ்சம் கொடுக்கக்கூடிய செயலாகத்தான் இது பார்க்கப்படுகிறது, ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி, வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். எனவே ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரை சார்ந்த தமிழக வெற்றி கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தற்போது புகார் மனு அளித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது ஒரு தண்ணீர் பாட்டில் கூட கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் இது குறித்து வீடியோ காட்சிகளை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம், அவர்களும் இதன் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.