களமிறங்குகிறாரா செந்தில் பாலாஜி? திமுக-வின் மாஸ்டர் பிளான்!
Seithipunal Tamil March 25, 2026 07:48 PM

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை, குறிப்பாகக் கோயம்புத்தூரைத் தனது கோட்டையாக மாற்ற திமுக அதிரடி வியூகம் வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவையை குறிவைக்கும் திமுக: கடந்த 2001, 2011 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கோவையில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலை மாற்றியமைக்க, மேற்கு மண்டலப் பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜியை கோவையில் களம் இறக்க அக்கட்சித் தலைமை விரும்புகிறது.

கடந்த முறை தனது சொந்த ஊரான கரூரில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி, இந்த முறை கோவையில் போட்டியிட்டால் அது ஒட்டுமொத்த மேற்கு மண்டலத்திலும் திமுக-விற்குச் சாதகமான அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதி: செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடும் பட்சத்தில், அவர் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இத்தொகுதியில் தற்போது பாஜக-வின் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ-வாக உள்ளார்.

செந்தில் பாலாஜி களமிறங்கினால், அது நேரடியாக செந்தில் பாலாஜி Vs எஸ்.பி. வேலுமணி என்ற பலப்பரீட்சையாக மாறும். அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அக்கட்சியின் செல்வாக்கை உடைப்பதே செந்தில் பாலாஜியின் முக்கிய இலக்காகக் கூறப்படுகிறது.

பாஜக-விற்கு செக்: பாஜக வலுவாக உள்ள கோவை தெற்கு தொகுதியைக் குறிவைப்பதன் மூலம், அந்தப் பகுதியில் அக்கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் வருகை கோவை தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கியுள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.