ரூ. 600 கோடி சொத்து, 17 கிலோ தங்கம், வைர நகைகள் - லாட்டரி மார்ட்டின் மகன் தாக்கல் செய்த அதிரடி பிரமாணப் பத்திரம்!
Seithipunal Tamil March 25, 2026 08:48 PM

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக, பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகனும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் (LJK) நிறுவனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உருவெடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மொத்த மதிப்பு: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி சிந்துஸ்ரீ ஆகியோரின் பெயரில் மொத்தம் சுமார் ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதில் அசையும் சொத்துக்கள் ரூ. 340 கோடியும், அசையா சொத்துக்கள் ரூ. 270 கோடியும் அடங்கும்.

தங்கம் மற்றும் வைரம்: ஜோஸ் சார்லஸிடம் மட்டும் ரூ. 26 கோடி மதிப்புள்ள 17.5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 44 கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ. 5.35 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 2.10 கோடி மதிப்பிலான வைரங்கள் உள்ளன.

வெள்ளி மற்றும் கைக்கடிகாரங்கள்: இவர்களிடம் மொத்தம் ரூ. 5.45 கோடி மதிப்பிலான 195 கிலோ வெள்ளிப் பொருட்களும், ரூ. 40 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த சர்வதேச பிராண்ட் கைக்கடிகாரங்களும் உள்ளன.

சொகுசு கார்கள்: ரூ. 1.29 கோடி மதிப்புள்ள டொயோட்டோ வெல்பையர் (Toyota Vellfire) மற்றும் ரூ. 66 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.

நிலம் மற்றும் கட்டிடங்கள்: ஜோஸ் சார்லஸ் பெயரில் ரூ. 192 கோடி மதிப்பிலான நிலங்களும், ரூ. 269 கோடி மதிப்பிலான குடியிருப்பு கட்டிடங்களும் உள்ளன.

வருமானம் மற்றும் முதலீடு: இவரது நிறுவனம் கடந்த ஓராண்டில் ரூ. 59.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் பல்வேறு வங்கிகளில் ரூ. 200 கோடியை இவர் முதலீடு செய்துள்ளார்.

தேர்தல் பின்னணி:
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) இணைந்துள்ளது. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியின் காமராஜர் நகர் மற்றும் நெல்லிதோப்பு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

லாட்டரி மார்ட்டின் நிறுவனம் ஏற்கனவே தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் திமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குப் பல நூறு கோடிகளை நன்கொடையாக வழங்கியது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மகனின் இந்த மெகா சொத்து அறிவிப்பு புதுச்சேரி தேர்தல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.