"அப்பா அந்த சமயத்துல இறந்துட்டாரு; நான் சினிமாவுக்கு வந்தது அம்மாவுக்கு பிடிக்கல.!"- நிவின் பாலி
Vikatan March 25, 2026 07:48 PM

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் நிவின் பாலி, " ஆரம்பத்தில் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்தின் ஆடிஷனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் நான் இல்லை.

வினீத் ஸ்ரீனிவாசனின் (படத்தின் இயக்குநர்) பிளாக்கை (Blog) வழக்கமாக வாசிப்பேன். ஒருமுறை அவர் அதில், 'நான் நினைத்த நான்கு கதாபாத்திரங்களில், ஒரு கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் இன்னும் கிடைக்கவில்லை' என்று எழுதி, அந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்பதையும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

நிவின் பாலி - Nivin Pauly

அதைப் பார்த்த உடனே என்னுடைய புகைப்படங்களை நான் ஆடிஷனுக்காக அனுப்பினேன். அந்த சமயத்தில் நான் கீழே விழுந்து கால் உடைந்திருந்ததால் ஓய்வில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆடிஷனில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது.

என்னுடைய நண்பர் மஜு மற்றும் உறவினர் தீரஜ் ஆகியோரின் உதவியுடன் தான் நான் ஆடிஷன் நடந்த இடத்திற்கு சென்றேன். காலில் மாவுக்கட்டுடன் போய் நின்றேன். வினீத் என்னை முதன்முதலில் பார்த்தது அப்படித்தான்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " நான் பெங்களூருவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என் தந்தை இறந்துவிட்டார். சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்ற என் கனவை நான் அவரிடம் சொன்னதே இல்லை. ஒருவேளை நான் அப்போது சொல்லியிருந்தால், அவர் எனக்கு ஆதரவாக இருந்திருப்பார்.

நிவின் பாலி - Nivin Pauly

ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடித்தது என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. சினிமா ஒரு நிரந்தர தொழில் இல்லை என்று அவர் நினைத்தார். அவர் நினைத்ததும் இயல்பான விஷயம்தான். ஏனென்றால் எங்கள் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஒரு நிலையான வேலைக்குச் சென்று, சம்பளம் வாங்கி, ரிஸ்க் எடுக்காமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் என் அம்மாவிற்கு இருந்தது. எனது முதல் படம் வெற்றி பெற்றபோதுகூட, அவர் முகத்தில் பெரிய மகிழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அந்த வெற்றிக்குப் பிறகும்கூட, 'நீ ஒரு வங்கி வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்' என்றுதான் என் அம்மா சொன்னார்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.