ராம நவமி விரத முறை - நற்பலன்களை அள்ளித்தரும் தாரக மந்திரம்!
Dinamaalai March 26, 2026 11:48 AM

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அவதார தினமான இன்று மார்ச் 26ம் தேதி வியாழக்கிழமை, ராம நவமி விரதத்தை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மகத்துவமான பலன்கள் குறித்து பார்க்கலாம். 

மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமர், சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில் அவதரித்தார். பித்ரு வாக்கிய பரிபாலனம், ஏகபத்தினி விரதம் என ஒழுக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்து காட்டிய அந்த உத்தமரின் அருளைப் பெற இன்றைய நாள் மிக உகந்தது.

ஸ்ரீ ராம நவமி பூஜை செய்யும் முறை:

வீட்டைத் தூய்மை செய்து, நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது மங்கலத்தைத் தரும். பூஜை அறையில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை (சீதா, லட்சுமணர், பரத, சத்ருக்னர் மற்றும் ஆஞ்சநேயருடன் இருக்கும் படம்) வைக்க வேண்டும். படத்திற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, ராமருக்கு மிகவும் பிரியமான துளசி மாலை அல்லது மல்லிகைப் பூக்களைச் சூட்ட வேண்டும். 108 போற்றிகள் அல்லது ராம நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம். "ஸ்ரீ ராம ஜெயம்" என்று எழுதுவது அல்லது ஜெபிப்பது கூடுதல் பலன் தரும்.

நிவேதனம் (பிரசாதம்):

ராம அவதாரத்தின் போது அவர் காட்டில் எளிமையாக வாழ்ந்ததை நினைவுபடுத்தும் வகையில், எளிமையான உணவுகளே இன்று பிரதானமாகப் படைக்கப்படுகின்றன. வெல்லம், புளி, சுக்கு, ஏலக்காய் கலந்த பானகம், தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை கலந்த நீர்மோர், ஊறவைத்த பாசிப்பருப்புடன் மாங்காய், தேங்காய் துருவல் கலந்த வடை, தவிரச் சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் பஞ்சாமிர்தம் படைக்கலாம்.

விரத முறைகள்:

இன்று அதிகாலை முதல் மாலை வரை உணவின்றி விரதம் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் பால், பழங்கள் மட்டும் உட்கொள்ளலாம். "ராம" என்ற சொல்லில் உள்ள 'ரா' என்பது 'ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சர மந்திரத்திலிருந்தும், 'ம' என்பது 'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை. எனவே, இந்தத் தாரக மந்திரத்தை இன்று 108 அல்லது 1008 முறை சொல்வது சைவ-வைணவ ஒற்றுமையையும் மன அமைதியையும் தரும். மாலையில் ராமர் அல்லது பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் 'ஸ்ரீ ராம பட்டாபிஷேக' நிகழ்வைக் காண்பது கோடி புண்ணியத்தைத் தரும்.

ராம நவமி விரதத்தின் பலன்கள்:

கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ராம-சீதையை இன்று வழிபட மீண்டும் ஒன்று சேருவார்கள். ஜாதக ரீதியாகத் திருமணத் தடைகள் உள்ளவர்களுக்கு விரைவில் வரன் அமையும். ராம நாமத்தை உச்சரிப்பதால் மன பயம் நீங்கி, எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நலம் தேறும். வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிலைத்து நிற்கும், வறுமை நீங்கிச் செல்வம் பெருகும். ராமரை வணங்குமிடத்தில் ஆஞ்சநேயர் அருட்பார்வை எப்போதும் இருக்கும் என்பதால், தைரியமும் புத்தியும் கூடும். இன்று ரவி யோகம் கூடி வருவதால், சூரிய குலத் திலகமான ராமரை இன்று வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் உள்ள சூரிய தோஷங்களையும் போக்கி, அரசு வழியில் நன்மைகளைப் பெற்றுத் தரும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.