ஆந்திரா: லாரியுடன் மோதி தீப்பிடித்த பஸ்; 12 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!
Vikatan March 26, 2026 01:48 PM

ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் பஸ் ஒன்று எரிந்து நாசமானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் தெலங்கானாவின் நிர்மல் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. பஸ் ஆந்திராவில் உள்ள மார்க்கபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி ஒன்றுடன் மோதிக்கொண்டது. இதில் பஸ் எரிபொருள் டேங்கில் கசிவு ஏற்பட்டு பஸ்ஸும், லாரியும் தீப்பிடித்துக்கொண்டது. காலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்தபோது அதிகமான பயணிகள் உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டனர்.

இது தவிர மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக அவர்களது உறவினர்கள் மூலம் டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த அனுதாபமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி உடனே அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.