அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 25 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக ரீதியாக மேற்கொண்ட இந்த மத்தியஸ்த முயற்சியை ஈரான் ராணுவம் பகிரங்கமாகக் கேலி செய்துள்ளது.
“உங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என்று ஈரான் ராணுவத் தலைமையகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, 5 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போதிலும், அமெரிக்காவுடன் தாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
மறுபுறம், அமெரிக்காவின் இந்தத் திடீர் போர் நிறுத்தத் திட்டம் தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானின் அரசு கட்டிடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை இன்று அதிகாலை முதல் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்கா கூடுதலாக 5 ஆயிரம் வீரர்களையும் பாராட்ரூப்பர்களையும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி தனது படைபலத்தைப் பெருக்கி வருவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.