தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதிகளைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய அவல நிலை நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதே சமயம் விசிக போன்ற முக்கியக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“திமுகவை நம்பியவர்கள் இறுதியில் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இப்போதாவது உணருங்கள்” என்று அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிமைகளாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் மிகுந்த சுதந்திரத்துடனும் மரியாதையுடனும் இருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
தொகுதிப் பங்கீட்டில் நிலவும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி இபிஎஸ் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், திமுக கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.