சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்
ஆளும் திமுக அரசின் மீதான அதிருப்தி மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. மோசமான ஆட்சி நடைபெற்று வருவதால், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எங்கள் பிரச்சாரம் எங்கு தொடங்கினாலும் மக்கள் பேராதரவு அளிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முழு ஆதரவுடன் நாங்கள் களத்தில் உள்ளோம். மயிலாப்பூரில் தாமரை வெற்றி பெறுவது உறுதி.
நான் வாரிசு அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். என்னைப் பற்றிப் பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நான் என் தந்தையால் வளர்க்கப்பட்டவள் என்றாலும், பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தேசிய அரசியலைத் தேர்ந்தெடுத்தேன்.
பல ஆண்டுகளாக பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து மண்டல், மாவட்டம், மாநிலம், தேசியம் என படிப்படியாக உயர்ந்தவள் நான். எவ்வித வாரிசு பின்புலத்தையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் சேகர்பாபு திமுக குடும்பத்திடம் அடிமையாக இருப்பவர். ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ள அவர், வாரிசு அரசியல் குறித்துப் பேசக் கூடாது.
பாஜகவை விமர்சிக்கும் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட திமுக அமைச்சர்களுக்கு டெல்லி என்றாலே உதறல் எடுக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என்று தகவல் வந்தாலே முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பயப்படுகிறார்கள்.
தாங்கள் செய்துள்ள குற்றங்களால், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே அவர்கள் உள்ளனர். இவ்வளவு பேசும் திமுகவினர் கனிமொழி எம்.பி எதற்காக டெல்லி சென்றார் என்பதை விளக்க முடியுமா ?
எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் சுமுகமாக முடிந்துள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக உரிய மரியாதையும் நியாயமும் வழங்கவில்லை. பாஜகவைக் காட்டி பயமுறுத்தியே கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளை திமுக குறைத்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர். அங்கேயும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை நாங்கள் தயாரித்துள்ளோம். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிக்கையும் , எங்களுடைய வளர்ச்சி சார்ந்த அறிக்கையும் இணைந்து மக்களுக்கான சிறந்த திட்டங்களை வழங்கும். 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் மாநிலம் இருந்தாலும், சரியான நிதி மேலாண்மை மூலம் எளிய மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதை எங்கள் கூட்டணி நிரூபித்துக் காட்டும்.