இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, ஏப்ரல் 1 முதல் 'வருமான வரிச் சட்டம் 2025' அமலுக்கு வருகிறது. இதில் வரி விகிதங்கள் அல்லது வரி அடுக்குகளில் மாற்றங்கள் இல்லை என்றாலும், வரி தாக்கல் செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கூப்பன்களுக்கான வரி விலக்கு வரம்பு ஒரு உணவிற்கு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
வீட்டு வாடகை சலுகையில் 50 சதவீத விலக்கு பெறும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், போலி வாடகை ரசீதுகளை தவிர்க்க வீட்டு உரிமையாளரின் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 'படிவம் 16' நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக 'படிவம் 130' அறிமுகம் செய்யப்படுகிறது. பான் கார்டு பயன்பாடு மற்றும் மூலதன ஆதாய கணக்கீடுகளிலும் கூடுதல் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் வரி செலுத்துவதை எளிதாக்கவும், டிஜிட்டல் முறையை வலுப்படுத்தவும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
Edited by Siva