Vande Bharat: வந்தே பாரத் ரயில் உணவில் நெளித்த புழுக்கள்.. வைரலாகும் வீடியோ!
பேச்சி ஆவுடையப்பன் March 26, 2026 08:14 PM

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு நெளிந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பலவகையான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவு ரயில்கள் தொடங்கி வந்தே பாரத் ரயில்கள் வரை அனைத்திலும் உணவு விநியோகம் என்பது செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு தரமான உணவு பயணிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வண்ணம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த உணவில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. இப்படியான நிலையில் வந்தே பாரத் ரயில் பயணிகள் அதிர்ச்சியடையும் வண்ணம் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

பாட்னா–டாட்டாநகர் வந்தே பாரத் விரைவு ரயிலில் மார்ச் 15ம் தேதி ரிதேஷ் குமார் பயணம் செய்துள்ளார். அப்போது  தனக்குப் பரிமாறப்பட்ட தயிரில் புழுக்கள் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். புகார் அளிப்பதற்காக ஏற்கனவே ரயில் மேலாளரைத் தொலைபேசியில் அழைத்திருப்பதாகவும் அந்த வீடியோவில் ரிதேஷ் குமார் கூறியிருந்தார்.

இன்னொரு வீடியோவில் ரிதேஷின் புகார் பற்றி விசாரிக்க ரயில்வே அதிகாரிகள் அவரது இருக்கைக்கு வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அவர்கள் டார்ச் விளக்கை பயன்படுத்தி தயிரை உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.  புழுக்கள் நகர்வதை ரிதேஷ் குமார் சுட்டிக் காட்டிய நிலையில் மீதமுள்ள உணவின் தரம் பற்றியும் விமர்சித்தார். அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அந்த ரயிலில் இருந்த பயணிகள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். நீங்கள் புகார் புத்தகத்தை வழங்கி இதனை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இன்னும் சிலர்  இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை இந்திய ரயில்வே மிக தீவிரமாக கையிலெடுத்து விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “மார்ச் 15 அன்று  21896 என்ற ரயில் எண் கொண்ட பாட்னா - டாட்டாநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் உணவுத் தரம் குறித்து எழுப்பிய புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விசாரணையின் முடிவில் ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதமும், உணவு வழங்கும் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு, ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பயணிகளின் பாதுகாப்பும் தரமும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.