புதுச்சேரியில் விசிகவுக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பவில்லை.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் இடையிலான குழப்பத்தால் முதலில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் தனியாக 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்து நெட்டப்பாக்கம், ஊசுடு, உழவர்கரை ஆகிய தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் மனு செய்தனர். காங்கிரஸ் நிலைப்பாட்டால் இந்தியா கூட்டணியே சிதைந்து போன சூழலில் தற்போது விசிக சார்பில் போட்டியிடவுள்ளனர்.
இதில் நெட்டப்பாக்கம் வேட்பாளர் அமுதவன் கட்சியின் ஏ, பி படிவம் தரவில்லை. இதனால் அவரின் மனு சுயேட்சையாக ஏற்கப்பட்டது. ஊசுடு வேட்பாளர் அரிபுத்திரி, உழவர்கரை வேட்பாளர் புஷ்பலதா ஆகியோர் மனுக்கள் கட்சி சார்பில் ஏற்கப்பட்டாலும், அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாது என தெரியவந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பவில்லை. இதனால் அவர்களுக்கு சுயேச்சை சின்னங்கள்தான் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கும் வாளி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.