ஒருகாலத்தில் அரசியல், சினிமா, அரசு விழாக்கள் என அனைத்திலும் சுவர்களே பேசும் அளவுக்குத் தொழில்முறை ஓவியர்கள் தங்கள் கலைச்சுவையை பரப்பி வந்தனர்.
தேர்தல் காலங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சிச் சின்னங்கள் மற்றும் பிரமாண்ட கட்-அவுட்களை உயிரோட்டமாக உருவாக்கி மக்களின் கவனத்தை ஈர்த்த இவர்களின் கைவண்ணம், நகரங்களின் அடையாளமாகவே திகழ்ந்தது. அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகளைத் தவிர்க்க இயற்கை ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தியதும் இவர்களே.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசியல் கட்சிகள் இவர்களுக்கு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வது அக்கால வழக்கமாக இருந்தது.ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகையால் இந்த கலை மெதுவாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. குறைந்த செலவிலும் அதிக வேகத்திலும் பேனர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்கள் உருவானதால், பல ஓவியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மாற்றுத் தொழில்களுக்கு மாறினர்.
கிராமப்புறங்களில் கிடைத்த குறைந்தபட்ச வேலைவாய்ப்பும் தற்போது தேர்தல் ஆணையத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால் பறிபோய்விட்டதாக ஓவியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையை உணர்த்தும் வகையில், புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதி மற்றும் அரசு மன்னர் கல்லூரி சுவர்களில் ஓவியர்கள் தங்கள் கோரிக்கைகளை கலை வடிவில் பதிவு செய்தனர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளின் சின்னங்களையும் வரைந்து, "ஓவியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க சுவர் விளம்பரங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்" என உருக்கமாக வேண்டியிருந்தனர்.
இருப்பினும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த ஓவியங்களை வர்ணம் பூசி அகற்றியது. இந்தச் சம்பவம், டிஜிட்டல் யுகத்தில் பாரம்பரியக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.