அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அதிருப்தி எழுந்த நிலையில் ஒரு தொகுதியில் போட்டியிட சம்மதம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பூவை ஜெகன்மூர்த்தி.

அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியாக கே.வி.குப்பம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்திக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று எனக் கூறி கட்சியின் நிர்வாக குழுவிடம் விவாதித்து முடிவு சொல்வதாக ஜெகன் மூர்த்தி கூறியிருந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக உறுதியளித்திருந்த நிலையில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தியில் நேற்றைய தினம் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, “அதிமுக கூட்டணியில், புரட்சி பாரதம் தொடர்ச்சியாக நீடித்து வருகிறோம். இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு பேசினோம். எந்தவிதத்திலும் புரட்சி பாரதத்தை கைவிட மாட்டோம் என்று ஆறுதல் கூறினார் எடப்பாடி பழனிசாமி. நேற்று எங்கள் நிர்வாக குழு கூடி, ஒரு சில கருத்துக்கள் முடிவுகள் எடுத்தோம். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அண்ணா திமுக கூட்டணியில் தொடர்பு என்று முடிவு செய்து இருக்கிறோம். புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கி உள்ளார்கள். ஏற்கனவே வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களது கட்சியின் நிர்வாகிகள் ஒரு சிலர் கூடுதல் இடம் வேண்டுமென்று கேட்டார்கள். தற்போது. ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்கிறோம். கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன்” என்றார்.