அமெரிக்க ஈராக் போர்..எரிபொருள் தட்டுப்பாடு..தனுஷின் கர படத்தின் கதை இதுதானா!
ராகேஷ் தாரா March 28, 2026 12:14 AM

போர் தொழில் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா தனுஷின் கர படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் உள்ள கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கமலின் தேவர் மகன் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது . 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் தனுஷின் 54 ஆவது படமாக கர திரைப்படம் உருவாகியுள்ளது. மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 1990 களை மையப்படுத்தி த்ரில்லர் திரைப்படமாக கர உருவாகியுள்ளது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ Faces Of Kara இன்று வெளியிடப்பட்டது.

கர படத்தின் கதை 

கர திரைப்படத்தின் ஒன்லைன் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 1991-ல், ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வளைகுடாப் போர் நடந்துகொண்டிருந்தபோது, ​​தமிழ்நாட்டின் கடலோர நகரமான இராமநாதபுரத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகம் முழுவதும் எண்ணெய் கிடங்குகள் எரிந்துகொண்டிருந்ததால், பெட்ரோலுக்கும் டீசலுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. தனது அபாயகரமான கடந்த காலத்திலிருந்து விலகிச் சென்ற கரசாமி, இனி ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சபதம் செய்த அதே காரியங்களை மீண்டும் செய்ய நிர்பந்திக்கப்படுகிறான். அடுத்த 16 நாட்களுக்கு, தன்னை நம்பிய மக்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாத்து, பத்திரமாக வழிநடத்த அவன் எல்லாவற்றையும் பணயம் வைக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடுள்ள ஒரு நகரத்தின் பின்னணியில், உயிர் பிழைத்தல், விசுவாசம் மற்றும் மீட்பு ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதட்டமான, உணர்ச்சிப்பூர்வமான கதையே கர திரைப்படத்தின் கதையேன இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் அமெரிக்கா ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் மற்றும்  அதன் விளைவாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு சூழலில் மக்கள் இப்படத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கலாம். விறுவிறுப்பான கதைசொல்லலும் தனுஷின் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமான மாஸ் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே போல் இதுவரை ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்துவந்த மமிதா பைஜூ இப்படத்தில் மிக உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நாம் பார்க்கலாம். கே.எஸ் ரவிகுமார் , சூரஜ் வெஞ்சரமூடு போன்ற சிறந்த நடிகர்கள் படத்தில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுவார்கள் என நிச்சயம்  நம்பலாம். 

 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.