கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கௌரி அங்கலா பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், ராய்ச்சூரைச் சேர்ந்த சஞ்சனா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடைபெற்றது. வாழ்க்கை இனிதாகத் தொடங்கிய சூழலில், கடந்த மார்ச் 21-ம் தேதி கணவனை மருந்து கடைக்கு அனுப்பிவிட்டுச் சஞ்சனா திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட நாகராஜின் தந்தை கண்டேப்பா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பால் அதே நாளில் உயிரிழந்தார். ஒரே நேரத்தில் மருமகள் மாயம், குடும்பத் தலைவரின் மரணம் என அந்த குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.
சஞ்சனாவைக் கண்டுபிடிக்கக் கோரி நாகராஜ் தற்போது கொப்பல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சஞ்சனாவின் கையில் ‘ரவி’ (Ravi) என்று பச்சை குத்தப்பட்டிருப்பதை அவர் அடையாளமாகக் குறிப்பிட்டுள்ளார். சஞ்சனாவின் சகோதரர் பெயரும் ரவி என்பதால், அந்தப் பச்சை குத்தல் யாரைக் குறிக்கிறது என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தற்கொலையா, கடத்தலா அல்லது திட்டமிட்ட மாயமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குடும்பத் தலைவரின் இழப்பு, மறுபக்கம் மாயமான மனைவியின் மர்மம் என அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.