ஜெயலலிதாவின் நேரடி மோதல் உத்தி இம்முறை மிஸ்ஸிங்? நேரடிப் போட்டியை தவிர்த்த அதிமுக..!
Top Tamil News March 28, 2026 09:48 PM

தமிழகத் தேர்தல் வரலாற்றில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடப் பெரும் கட்சிகளும் நேரடியாக மோதும் தொகுதிகளில் எப்போதும் போட்டி அனல் பறக்கும். குறிப்பாக, திமுகவின் வலுவான அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களையே வேட்பாளர்களாகக் களம் இறக்கி 'நேருக்கு நேர்' மோதுவதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது முக்கிய அரசியல் உத்தியாகக் கொண்டிருந்தார். உதயசூரியன் சின்னத்திற்கு எதிராக இரட்டை இலை சின்னத்தையே வேட்பாளராக நிறுத்தி, மற்ற கட்சிகள் ஊடுருவ இடமளிக்காமல் கடும் சவாலைத் தருவது அவரது பாணியாகும்.

நேரடிப் போட்டிகள் இல்லாத இடங்களில், அதாவது பிரதான சின்னங்களுக்கு எதிராக மாற்றுச் சின்னங்கள் களம் காணும் தொகுதிகளில் உதயசூரியனோ அல்லது இரட்டை இலையோ எளிதில் வெற்றி பெறுவதையே கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால், இந்த முறை அதிமுக கூட்டணியில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்திற்குப் பதிலாக, கூட்டணி கட்சிகளான பாஜகவின் 'தாமரை', அமமுகவின் 'குக்கர்' மற்றும் பாமகவின் 'மாம்பழம்' ஆகிய சின்னங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் (சைதாபேட்டை), கே.என்.நேரு (திருச்சி மேற்கு) ஆகியோருக்கு எதிராக அமமுகவின் குக்கர் சின்னமும்; எ.வ.வேலு (திருவண்ணாமலை), கே.ஆர்.பெரியகருப்பன் (திருப்பத்தூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) மற்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு (ராதாபுரம்) ஆகியோருக்கு எதிராக பாஜகவின் தாமரை சின்னமும் போட்டியிடுகின்றன. மேலும், அமைச்சர்கள் ஆர்.காந்தி, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி ஆகியோரது தொகுதிகளில் தமாகா (தாமரை சின்னம்) வேட்பாளர்களும், அமைச்சர் ராஜேந்திரனின் சேலம் வடக்கு தொகுதியில் பாமகவின் மாம்பழ சின்னமும் களம் காண்கின்றன.

இந்தத் தொகுதி ஒதுக்கீடு அதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக திமுக அமைச்சர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிமுக, இந்த முறை முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்த்துள்ளது. இது திமுக அமைச்சர்கள் எளிதில் வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாக அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.