2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக தனித்து களம் காண்கிறது. அதேநேரம் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிடுவார்களா என்பது இதுவரை தெரியவில்லை. ஒருபக்கம் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று பெரம்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை.. ஏனெனில் விஜய் பேசுசுவதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டிருக்கும் இடம் மிகவும் குறுகலான பகுதி என்பதால் விஜயை பார்க்க மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது என யோசித்தே அவருக்கு அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது திமுகவின் சதி என விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டார். மேலும், சில தேர்தல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக் சொல்லியும், பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக்கை சந்தித்து புகார் அளிப்பதற்காக விஜய் இன்று மதியம் தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
அப்போது அவரை பார்ப்பதற்காக தலைமை செயலக ஊழியர்களும், ஊடகங்களும் பெருமளவு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கை முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் வண்டியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.