தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 60 புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் 03 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவருக்கு கோவை தெற்கு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளநிலையில், அவருக்கு பதிலாக ஆசி.எம். தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கோவைத் தெற்கு தொகுதிக்கு அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, கரூரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்கொள்ளப் பயந்து நடுங்கிப்போய் செந்தில் பாலாஜி கோவைக்குத் தப்பியோடி வந்திருப்பதாக அவர் கடுமையாக சாடியிருந்தார்.
அதாவது, விஜயபாஸ்கர் பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே செந்தில் பாலாஜிக்குக் காய்ச்சலே வந்துவிட்டதாகவும் சொந்தத் தொகுதியை விட்டு அவர் வெளியேறுவதற்குக் காரணமே தோல்வி பயம் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பரப்பளவில் சிறியது என்பதால், இங்குள்ள மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம் என்றும், ஏதோ ஒன்றைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்றும் செந்தில் பாலாஜி இங்கு வந்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், தான் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற உரிமையோடு இங்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில், செந்தில் பாலாஜிக்கு முதலில் அவர் கட்சிக்காரர்களே ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என விமர்சித்துள்ளார். அதேநேரம் செந்தில் பாலாஜியை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவேன் என்றும் அம்மன் அர்ஜுனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.