திமுக, அதிமுக கண்டுக்கொள்ளவில்லை; 04 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி; நடிகர் மன்சூர் அலிகான் லால்குடியில் போட்டி..!
Seithipunal Tamil March 29, 2026 04:48 AM

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவாரி விஜய், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று தனது முதல் மாநாட்டில் கூறியிருந்தது அதிமுக-திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் இழுபறி நடப்பதற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2026 தேர்தலில் போட்டியிடவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான் திமுக -அதிமுக கட்சிகள் தங்களை கண்டு கொள்ளாத நிலையில், அக்கட்சி 04 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

அதாவது, திருச்சி லால்குடியில் போட்டியிடப் போவதாகவும் அவரது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 04 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து மன்சூர் அலிகான் மேலும் தெரிவித்துள்ளதாவது; 

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பள்ளப்பட்டியில்தான் நான் வளர்ந்தேன். 2011-வது ஆண்டிலேயே நான் திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக திமுகவில் சீட் கேட்டு 06 மாதமாக அலைந்தோம். எந்த பலனும் இல்லை. பின்பு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை சிலமுறை சந்தித்து வாய்ப்பு கேட்டேன் . 02 கட்சிகளும் கண்டு கொள்ளாததால் திருச்சியில் 04 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதனால், லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் சிறுவர்களுக்குக்கூட போதைப் பொருள் கிடைக்கிறது. அதைத் தடுக்க ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, 10 முறை, 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தாவைகள் பூர்த்தி செய்ய்ப்படவில்லை. எல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்போம் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.