தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். நேற்று 26 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு, இன்று கட்சியின் 'ஹீரோ'வாகக் கருதப்படும் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுகிறார்.
தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம்:
தேர்தல் களத்தில் வாக்குறுதிகள் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடந்த முறை திமுக அறிவித்த 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அக்கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. அதேபோல், இந்த முறையும் பெண்களைக் கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிமொழிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் இந்த அறிக்கையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக-வின் சவாலும் திமுக-வின் பதிலடியும்:
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 291 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், குடும்பங்களுக்கு ரூ. 10,000 சிறப்பு உதவித்தொகை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் 'குல விளக்கு' திட்டம் மற்றும் பெண்களுக்கு இலவசப் பிரிட்ஜ் போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்குப் போட்டியாக, திமுகவும் மக்கள் கவரும் வகையிலான வலுவான திட்டங்களை அறிவிக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஸ்டாலினின் 'லேட்டஸ்ட்' உத்தி:
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இது தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. சமூக நீதி, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இன்று மாலை வெளியாகவுள்ள இந்த அறிக்கை தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.