தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யப் பகல், இரவு பாராமல் உழைத்த நெகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை என ஒருபுறம் வேலைகள் மலைபோலக் குவிந்திருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த நான்கு நாட்களாக முதல்வர் ஸ்டாலின் சரியாக உறங்கவே இல்லையாம்.
ஒவ்வொரு ஊரிலும் யாருக்கு மக்களின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது, வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்பது குறித்த ரகசிய ரிப்போர்டுகளை வைத்துக்கொண்டு, நள்ளிரவு தாண்டியும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “கட்சியின் வெற்றிதான் முக்கியம், ஒவ்வொரு வேட்பாளரும் முத்து முத்தாக இருக்க வேண்டும்” என்பதில் பிடிவாதமாக இருந்த முதல்வர், தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இந்தப் பட்டியலைச் செதுக்கியுள்ளார்.
அறிவாலயத்தில் முகாமிட்டிருந்த முக்கிய நிர்வாகிகளே முதல்வரின் இந்த அர்ப்பணிப்பைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளனர். ஸ்டாலினின் இந்த ‘தூக்கமில்லா உழைப்பு’ 2026 தேர்தலில் திமுகவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.