அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அண்ணன் மகளும் பிரபல மருத்துவ உளவியலாளருமான மேரி எல் டிரம்ப் தனது யூடியூப் சேனல் வாயிலாக டிரம்ப் மேற்கொண்டு வரும் ஈரான் போர் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈரானில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று டிரம்ப் கூறி வரும் நிலையில் அதற்குப் பதிலடி கொடுத்துள்ள மேரி டிரம்ப் அந்த ஆட்சி மாற்றம் ஈரானில் அல்லாமல் அமெரிக்காவிலேயே நிகழும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ராஜாக்கள் யாரும் இல்லை என்பதை டிரம்ப் நினைவில் கொள்வது நல்லது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது குண்டு வீசுவது அந்த நாட்டு மக்களை விடுவிப்பதற்காக அல்ல என்றும் மாறாக டிரம்பின் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் மேரி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேவையற்ற போரினால் கோடிக்கணக்கான டாலர்கள் வீணாவதோடு எண்ணற்ற மனித உயிர்களும் ஆபத்தில் உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது டிரம்ப் சந்தித்து வரும் கடுமையான அரசியல் நெருக்கடிகள் மற்றும் அவமானங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே போர் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தனது உளவியல் ரீதியான விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபருக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ராஜாக்கள் இல்லை என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே டிரம்பின் போர் வேட்கையைக் கடுமையாகச் சாடியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.