தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பண்ணாரி மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா, இன்று அதிகாலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணி அளவில், வேப்பம் மற்றும் ஊஞ்ச மர விறகுகளைக் கொண்டு அக்னி இடப்பட்டு, சுமார் 15 அடி நீளத்திற்குப் பிரம்மாண்டமான குண்டம் வளர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் அம்மன் சப்பரம் மற்றும் படைக்கலங்கள் தெப்பக்குளம் சென்று வந்தன. பின்னர், குண்டத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சரியாக இன்று அதிகாலை 3:55 மணி அளவில், கோவில் தலைமைப் பூசாரி குண்டத்தில் இறங்கித் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.
கோவில் பூசாரியைத் தொடர்ந்து, பல நாட்களாக மாலை அணிந்து விரதம் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று 'தாயே பண்ணாரி.. அம்மா..' எனப் பக்தி முழக்கமிட்டபடி குண்டம் இறங்கினர். தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தின் மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

சில விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் குண்டம் இறங்கியும், பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கையில் ஏந்தியபடியும் தீமிதித்துத் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காகத் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.