திமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை! திருச்சியில் பரபரப்பு
Top Tamil News March 31, 2026 08:48 PM

திருவெறும்பூர் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (38). இவர் கூத்தைப்பார் பேரூராட்சியில் 11 வது வார்டு கவுன்சிலராகவும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர்களாகவும் உள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளார். மேலும் இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபான பாரை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புது தெரு அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை மறித்து கட்டையால் தாக்கி பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்த ரஞ்சித்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ரஞ்சித் குமாரின் உடலை பார்த்த கதறி அழுதனர். இதனிடையே நவல்பட்டு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.