பாதுகாப்புக்காக காசாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 08 குழந்தைகள் 02 வருடங்களுக்கு பிறகு பெற்றோர்களுடன் இணைப்பு..!
Seithipunal Tamil April 01, 2026 03:48 AM

2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 ஆண்டு வரை நீடித்தது. இந்தப் போரில், இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும்0 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 74 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

போர் காலக்கட்டத்தில், பாலஸ்தீனிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் உயிரைக் காக்க எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் போன்ற வெளிநாடுகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். போர்ச் சூழல் காரணமாக பெற்றோர்கள் அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

அதிலும் குறிப்பாக, கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் போர் உச்சத்தில் இருந்த போது, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பல குழந்தைகள் மற்றும் காயமடைந்த சிறுவர்கள் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டனர். போரின் காரணமாக எல்லைகள் மூடப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தங்கள் பெற்றோரைப் பார்க்காமல் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானதன் மூலம், போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்தானது.

இந்த போரினால் நிலைகுலைந்திருந்த காசாவின் நிர்வாகத்தைக் கண்காணித்தல், அங்கு அடிப்படை வசதிகளை மீண்டும் ஏற்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உலகில் அமைதியை நிலைநாட்டுதல், போரினால் பிரிந்தவர்களை சேர்த்து வைத்தல் போன்ற நோக்கங்களுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ’அமைதி வாரியம்’ எனும் உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில், காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ரஃபா எல்லை தற்காலிகமாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்காக காசாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 08 குழந்தைகள் முதற்கட்டமாக மீண்டும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது குழந்தையைத் தூக்கும் தாய்கள், குழந்தைப் பருவத்தைக் கடந்து வளர்ந்திருக்கும் தங்களது பிள்ளைகளை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் தந்தைகள் என ரஃபா எல்லையில் உணர்ச்சிகரமான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

இவ்வாறு மீண்டும் காசாவிற்குத் திரும்பியுள்ள பல குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவாத கூறப்படுகிறது. ஆனால், காசாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் போரினால் சேதமடைந்துள்ளதால், அவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்த வெளியேற்றத்தில் சென்ற சில குழந்தைகளின் பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த குழந்தைகள் தற்போது தங்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.