“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
ஸ்ரீராம் ஆராவமுதன் April 01, 2026 10:44 AM

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்து தற்போது தீவிரமான கட்டத்தில் உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸை திறக்க ட்ரம்ப் எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுத்தும் அது பலிக்கவில்லை. உலக நாடுகளிடம் ட்ரம்ப் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தற்போது தங்களுக்கு உதவாத எந்த நாட்டிற்கும் இனி உதவ மாட்டோம் என்று கூறியுள்ளதுடன், பிரிட்டனை கடுமையாக விமர்சித்துள்ளார். அது குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்காத உலக நாடுகள்

ஈரான் முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ராணுவ உதவிகள் செய்யுமாறு, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த போரில் தங்களை இணைத்துக்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை.

இதனால் ட்ரம்ப் மிகுந்த கோபமும், விரக்தியும் அடைந்தார். ஏனென்றால், ஹார்முஸ் முடக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலையும் உயர்ந்துள்ளது.

இதனால், உலக நாடுகளின் கோபம் ட்ரம்ப் மீது திரும்பியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், சொந்த நாட்டிலேயே, அதாவது அமெரிக்க மக்களே ட்ரம்ப்பிற்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இஸ்ரேலுடைய போரில் தேவையில்லாமல் ட்ரம்ப் நுழைந்து, நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறி, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது, ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால், தங்களுக்கு உதவாத நாடுகளை அவர் கடுமையாக சாடி வருகிறார்.

“கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நீங்களே போய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்“

அந்த வகையில், நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ள அவர், “ஹார்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது“ என்று கூறி, “முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து வாங்குங்கள், எங்களிடம் நிறைய உள்ளது. இரண்டாவதாக, தாமதித்துவிட்டாலும் இப்போதாவது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த ஜலசந்திக்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக போராட நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும், நீங்கள் எங்களுக்காக உதவாதது போலவே, இனி உங்களுக்கு உதவ அமெரிக்கா இருக்காது.“ என்று கூறியுள்ளார்.

மேலும், “ஈரான், அடிப்படையில், முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. உங்கள் சொந்த எண்ணெயை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்“ என்றும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டாலும் பரவாயில்லை, போரில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.