விஜய் மீது 2025 ஆம் ஆண்டு வழக்கு போடப்பட்டுள்ளமை குறித்து பெரம்பூரில் குறிப்பிடாமல் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது ஏன்..? வெளியான விவரம்..!
Seithipunal Tamil April 03, 2026 05:48 AM

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதில் கடந்த 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் மற்றும் தன் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ள கடன் தொகை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தார்.

அதில், பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவில் எந்தவித காவல்துறை வழக்கும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவைத் விஜய் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குடன் சேர்த்து 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை ஏன் பெரம்பூர் மனு தாக்கலில் அவர் குறிப்பிடவில்லை என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

அதாவது, கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர்  மீதும், அவரது தொண்டர்கள் மீது போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தல், நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் பெரவல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதற்கு முன்னதாக, தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு 2025ஆம் ஆண்டு முதல் மாநாடுகளை நடத்த துவங்கினார். அதன்படி கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் தவெக தலைவர் விஜய் மாநாடு நடத்திய போது அங்கு அவர் ரேம்ப் வாக் செய்தார். அப்போது அந்த அடுப்பு சுவர் மேல் ஏறி அந்தப் பாதையில் ஏறியவர்களை அவரது பாதுகாவலர்கள் தூக்கி கீழே வீசினர். இது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரையில் பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கை திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் விஜய் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, அந்தப் புகார் குறித்து தெரிவிக்கும் போது, புகார்தாரர் கடந்த 21.08.2025 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் நடைமேடை வரும்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் புகார்தாரர் ஏறியதாகவும் அப்பொழுது சுமார் 10 பவுன்சர்கள் புகார்தாரரை இடித்து தள்ளியும் அசிங்கமாக பேசியும் இடித்து தள்ளியதில் நெஞ்சுக்காயம் மற்றும் உள்காயம் ஏற்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த குற்ற வழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து எந்தவித சம்மனோ தகவலோ வரவில்லை. தற்பொழுதுதான் இந்த வழக்கின் விவரம் குறித்து தெரியவந்ததால் இவ்வழக்கு குறித்து இதில் குறிப்பிட்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.