பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் 29 அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மார்ச் 31 அன்று பெங்களூருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துவ மத முறைப்படி நடைபெற்றது.
ஆனால் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளானது காரணம் பிரகாஷ் ராஜ் தான் ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவர் என்று பலமுறை வெளிப்படையாக அறிவித்துள்ளதோடு, பல்வேறு சம்பவங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தும், மிகவும் மோசமாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், மத நம்பிக்கை இல்லை என்று கூறி வந்த அவர் ஏன் மதச் சடங்குகளை முன்னின்று நடத்தினார் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்க தொடங்கியதோடு கேள்விகளையும் எழுப்பினர்.
இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்குப் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளதாவது; ''எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் தாய்க்குத் தனது கடவுள் மீது நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கையின்படி அடக்கம் செய்யப்படுவதற்கான உரிமையை மறுக்க நான் யார்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்குக் கொடுக்கும் அடிப்படை மரியாதை என்றும், வெறுப்பைப் பரப்பும் கூட்டத்திற்கு இது புரியுமா என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.