நீண்ட இழுபறிக்குப் பின் ஒருவழியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, ஒரு தொகுதிக்கான வேட்பளாரை மட்டும் அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க தலைமை. சிட்டிங் தொகுதிகளில் பதினாறு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கியது. அதே போல், காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லாத உசிலம்பட்டி, மேலுார் உள்ளிட்ட தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்குத் தள்ளிவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கெனவே கோஷ்டி தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சீட் வாங்குவதில் தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது ஆதரவாளர்களுக்கு அதிக அளவில் சீட் வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்று முனைப்பு காட்டினார்.
செல்வப்பெருந்தகை - கார்கே
செல்வப்பெருந்தகையினால் சீட் கிடைக்காது என்று திட்டமிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள், டெல்லிக்குப் படையெடுத்தனர். கடந்த வாரமே காங்கிரஸ் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு துவங்கியது.
ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பளார்கள் வரை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை தேர்வு செய்தது. அந்தப் பட்டியலை டெல்லிக்கு அனுப்பினார்கள். டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்கிரீனிங் கமிட்டி அந்தப் பட்டியலை முதலில் ஆராய்ந்தது. பிறகு, அதிலிருந்து ஒரு வேட்பாளரை இறுதி செய்து, காங்கிரஸ் மத்திய தேர்வு குழுவுக்குக் கொடுத்தது.
நேற்று இரவு மத்திய தேர்வு குழுவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து நீண்ட ஆலோசனை நடந்தது. சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது குறித்து அப்போது பேசப்பட்டது.
சில எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் சரியில்லாமல் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் தலைமை யோசித்தது. இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் 11 பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என முடிவெடுத்தனர்.
பிற தொகுதிகளுக்கான தேர்வில் கடும் நெருக்கடி உண்டானது. பென்னாகரம் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்த பா.ம.க ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு சீட் வழங்க காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மயிலாடுதுறையின் சிட்டிங் எம்.எல்.ஏ-வை மாற்றிவிட்டு, அங்கு புதுமுகத்தை இறக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது. சிங்காநல்லுார் தொகுதிக்கு பெண் வேட்பாளரை முடிவு செய்தார்கள். அங்கு மயூரா ஜெயக்குமார் கடுமையாக மல்லுக்கட்டினார். இப்படி ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் பல சிக்கல் இருந்தது. டெல்லியில் தேர்வு குழுவில் ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி நீண்ட ஆலோசனை நடந்தது. குறிப்பாக மேலுார், உசிலம்பட்டி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்ய கடும் போராட்டம் நடந்திருக்கிறது. குளச்சல் பிரின்ஸ் மீண்டும் வாய்ப்பு கேட்டார். மூன்று முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருப்பதால், அவரது வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்படி பல்வேறு ஆலோசனைகளுக்கு மத்தியில், 27 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பளார்களை இறுதி செய்தனர்.
மேலுார் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் தேர்வு இறுதியாகவில்லை. அங்கு சுதர்ஸன நாச்சியப்பன் தன் மகன் ஜெயசிம்மாவிற்கு கேட்கிறார். ப.சிதம்பரம் தனது ஆதரவாளர் பச்சேரி சுந்தர்ராஜனுக்கு சிவகங்கை தொகுதி கிடைக்காமல் போனதால், மேலுார் தொகுதிக்கு மல்லுக்கட்டுகிறார். ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பிலிருக்கும் மகாத்மா என்பவர் தனக்கு வேண்டுமென டெல்லி லாபி மூலம் அழுத்தம் கொடுக்கிறார்.
இந்த பஞ்சாயத்துக்களால், அந்த தொகுதிக்கு பிறகு வேட்பாளரை தேர்வு செய்யலாம் என காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது. இப்போது வெளியாகியுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கையே ஓங்கியுள்ளது என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
“பத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் செல்வபெருந்தகை ஆதரவாளர்களாக உள்ளார்கள். ப.சிதம்பரம் தன் பங்கிற்கு மூன்று வேட்பாளர்களை இறுதி செய்திருக்கிறார். பிற தலைவர்களால் சொல்லிக்கொள்ளும்படி லாபி செய்ய முடியவில்லை” என்கிறார்கள். சீட் கிடைக்காத பல நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு எப்படியாவது சீட்டை மாற்றிவிட முடியுமா? என்கிற முயற்சியிலும் இறங்கியுள்ளார்களாம்.
“வாங்கிய28 தொகுதிக்கே இவ்வளவு கலாட்டா என்றால், கூடுதல் தொகுதி கிடைத்திருந்தால், தேர்தல் நடக்கும் தேதி வரை வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் கட்சிக்குள் நடந்திருக்கும்போல” என்று நக்கல் செய்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.