சுந்தர்.சி வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு விவரம்..!
Seithipunal Tamil April 05, 2026 04:48 AM

வரும் சட்டமன்ற தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் தனது மனைவி குஷ்புவுடன் வந்து சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி, சுந்தர்.சியின் சொத்து மதிப்பு, மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குஷ்புவிடம் மூன்றரை கிலோ தங்கம் இருப்பதாக சுந்தர்.சி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.  மதுரை மத்திய தொகுதியின் புதிய நீதிக் கட்சி வேட்பாளரான சுந்தர்.சி. தன்னிடம் 50 ஆயிரத்து 600 ரூபாயும், தனது மனைவி குஷ்புவிடம் 30 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தன்னிடம் ரூ.29.25 லட்சம் மதிப்பிலான 220 கிராம் தங்கம் இருப்பதாகவும், தனது மனைவி குஷ்புவிடம் 04 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3.55 கிலோ தங்கம், 60 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 24.36 கிலோ வெள்ளி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னிடம், தனது மனைவி மற்றும் மகளிடம் என மொத்தம் 05 கார்கள் இருப்பதாகவும், தன்னிடம் உள்ள மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு 02 கோடியே 97 லட்சம் ரூபாய் என்றும்,  குஷ்புவிடம் உள்ள மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு 06 கோடியே 06 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னையில் 08 வீடுகள் உட்பட இருவருக்கும் மொத்தம் 10 வீடுகள் இருப்பதாகவும் சுந்தர்.சி குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் சுமார் 06 கோடியே 90 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தால் தன்னால் மற்ற இடங்களுக்கு சென்று பரப்புரை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிடும் என்பதால் போட்டியிடவில்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.