“அரசுப் பேருந்தில் தவெக பெயர் எப்படி வந்தது?”… ஹேக்கர்களின் லீலை எனத் தகவல்.. போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை..!!!!
SeithiSolai Tamil April 07, 2026 01:48 AM

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில், ஊர் பெயர்களுக்குப் பதிலாக நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் பெயர் ஒளிரவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பேருந்து (TN 45 M 4853), திருச்சி மற்றும் தேனி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் வழக்கமாக ஊர் பெயர்கள் இடம்பெற வேண்டிய டிஜிட்டல் பலகையில், திடீரென தவெக பெயர் ஆங்கிலத்தில் ஒளிரத் தொடங்கியதைக்கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணையில் இறங்கிய போக்குவரத்துத் துறை, இது ஒரு திட்டமிடப்பட்ட ‘ஹேக்கிங்’ என்று முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளது.

யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் மென்பொருளை (Software) சட்டவிரோதமாக ஊடுருவி, பெயர்களை மாற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அந்தப் பேருந்தின் டிஜிட்டல் பலகை மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன.

அரசுச் சொத்தான பேருந்தின் தொழில்நுட்ப அமைப்புகளைச் சிதைத்தது தொடர்பாகக் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் பலகைகளைப் பராமரிக்கும் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, இனி வரும் காலங்களில் இத்தகைய பாதுகாப்பு மீறல்கள் நடக்காமல் இருக்கக் கூடுதல் கண்காணிப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.