இந்திய முன்னாள் வீரர் மற்றும் பல பிரான்சைஸ் கோப்பைகளை வென்ற பயிற்சியாளர் ஹேமங் பதானி தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார். முன்னதாக இவர் சிஎஸ்கே வெற்றிக்கு காரணம் தோனி மட்டுமே என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் நல்ல கோச் அல்ல என்றும் கூறிய வீடியோ மீண்டும் வைரலாயுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில், மிக மோசமாக விளையாடி 10 இடத்தை பிடித்த சென்னை அணியின் சொந்தம் இதே ஆண்டும் தொடர்கிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி அதே கடைசி இடமான 10-ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், குறிப்பாக ஆர்.சி.பி ரசிகர்கள் சென்னை அணியை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல்லைத் தவிர வேறு எந்த லீக்கிலும் ஃபிளெமிங் கோப்பை வெல்லவில்லை, தோனியின் இந்திய வீரர்களை கையாளும் திறமையே சிஎஸ்கே வெற்றிக்கு அடிப்படை என ஹேமங் பதானி கூறியுள்ளமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
இந்தியாவிற்காக 04 டெஸ்ட் போட்டிகள், 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹேமங் பதானி, பயிற்சியாளராக செல்லும் இடமெல்லாம் கோப்பை வென்றுள்ளார். இதுவரை டிஎன்பிஎல்லில் 04 கோப்பைகள், லங்கா பிரீமியர் லீக்கில் 03 கோப்பைகள், SA20 லீக், ILT20 லீக்கில் கோப்பைகள் என 09 பிரான்சைஸ் கோப்பைகளை வென்றுள்ளார்.
ILT20 லீக்கில் ஹேமங் பதானி தலைமையில் முதல் கோப்பையை துபாய் கேபிடல்ஸ் வென்றிருக்கும் நிலையில், அதன் தாய் அணியான டெல்லி கேபிடல்ஸுக்கும் ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பதானி தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு தமிழ்நாடு கிரிக்கெட்டர் மற்றும் தற்போது தமிழ்நாடு U19 பயிற்சியாளராக உள்ள யோ-மகேஷ் உடனான உரையாடலில், சிஎஸ்கே கோச் ஃபிளெமிங் குறித்து பேசிய ஹேமங் பதானியின் வீடியோ மீண்டும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதாவது, தோனி தலைமையில் 05 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றிருந்தாலும், 2023-க்கு பிறகு தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சிஎஸ்கே படுமோசமாக செயல்பட்டு வருகிறது.
தோனியால் தான் சிஎஸ்கே 05 முறை கோப்பை வென்றது என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் கோச்சாக இருந்தாலும் அவர் நல்ல கோச் கிடையாது என்றும், ஐபிஎல்லை தவிர அவரால் வேறு எங்கேயும் கோப்பை வென்றதில்லை என்றும் ஹேமங் பதானி கூறியுள்ளார்.
யோ மகேஷ் உடனான உரையாடலில் பேசிய ஹேமங் பதானி தெரிவித்துள்ளதாவது, 'சிஎஸ்கேவில் தோனி இருக்கிறார், ஃபிளெமிங் இருக்கிறார். ஆனால், தோனி தான் அனைத்தையும் பார்த்துக்கிறார், அது எல்லாருக்குமே தெரியும். இப்போ ஃபிளெமிங் இவ்ளோ பெரிய கோச்சாக இருக்கார் என்றால், ஐபிஎல் தவிர்த்து வேற எங்கயும் அவர் ஜெயிச்சதே கிடையாது.
SA20, ஹண்ட்ரட், பிக்பேஷ் லீக் என எதுலையும் அவர் ஜெயிச்சது கிடையாது, ஏன் நியூசிலாந்துக்கு அஸிஸ்டண்ட் கோச்சா இருந்தபோதும் அவருக்கு வெற்றி கிடையாது. அதனால் ஃபிளெமிங் வந்து நல்ல கோச்னு யாராவது என்கிட்ட சொன்னாங்கனா நான் ஒத்துக்க மாட்டேன். தோனியால தான் சிஎஸ்கே ஜெயிக்கிறாங்க, அவர் தான் அந்த டீமோட ராஜா. அவர் ஒரு இந்தியன், அவருக்கு எப்படி இந்திய வீரர்களிடமிருந்து சிறந்ததை கொண்டுவர வேண்டும் என்று தெரியும்.
ரோகித் சர்மாவும் அப்படி தான், அவரும் ஒரு இந்தியர் என்பதால் தான் 5 கோப்பைகளை வென்றார். ஐபிஎல் அணிகளை இந்திய பயிற்சியாளர்கள் வழிநடத்த வேண்டும், இதை புரிந்துகொள்ளும் பிரான்சைஸ் தான் நன்றாக செயல்படும்.' என்று பேசியுள்ளார்.தற்போது சென்னை அணி தோனி இல்லாமல் தொடர்ந்து மோசமாக சொதப்பிவரும் நிலையில் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.