சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய அனுமதி வழங்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை நேற்று முதல் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அமர்வில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கேரளா சபரிமலை கோயிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபரிமலை ஐயப்பன் 'நைஷ்டிக பிரம்மச்சாரி' என்ற தனித்துவமான தன்மையைக் கொண்டவர் என்று குறிப்பிட்டதோடு, சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதைப் பாலின பாகுபாடாகப் பார்க்க முடியாது என்று வாதிட்டார்.
அதேப்போன்று சீக்கியர்களின் குருத்வாரா அல்லது மசூதிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளுடன் இதை ஒப்பிட முடியாது என்றும் அவர் தனது வாதத்தில் முன்வைத்து பேசினார். அத்துடன், நுழைவை அனுமதிப்பது வழிபாட்டின் தன்மையையே மாற்றிவிடும் என்றும், அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் மதப் பன்மைத்துவத்தை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், பக்தர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும், பல நூற்றாண்டுகளாக ஐயப்பனை கோயிலின் நிறுவப்பட்ட மரபுகளின்படி வழிபட்டு வருகின்றனர் என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ''மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கூறியுள்ளார். அதாவது பெண்கள் மாதத்தில் மூன்று நாட்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்க முடியாது; ஒரு பெண்ணாக என்னால் இதை ஏற்கவே முடியாது.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, செப்டம்பர் 2018-இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையுடன் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதித்தது. இந்தப் பெரும்பான்மைத் தீர்ப்பு, பெண்கள் நுழைவதைத் தடைசெய்யும் கேரள விதிகளின் 3(b) விதியை ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.