10 அணிகளுக்கிடையிலான ஐபிஎல் 2026 தொடர் வெவ்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 05 முறை சாம்பியன் வென்ற பலமுறை இறுதிப்போட்டிக்கும், பிளே-ஆப் சுருக்கும் தகுதி பெற்ற சிஎஸ்கே அணி கடந்த ஆண்டுகளில் இருந்து தொடர் தோல்விகளால் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கேவை தவிர மற்ற அணிகள் ஏதாவது ஒரு வகையில் இம்முறை ஒரு புள்ளியாவது பெற்றுள்ளது. குறிப்பாக கே.கே.ஆர் அணி மழைகாரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஆறுதலாக ஒரு புள்ளி கிடைத்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் முதல் இரண்டு இடங்களில் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
10 அணிகளும் தீவிரமாக கோப்பையை வெல்ல போட்டியிட்டு வரும் நிலையில் அணி நிர்வாகங்களின் தலையில் இடியாய் இந்த உத்தரவை பிசிசிஐ இறக்கியுள்ளது.
பிசிசிஐயின் புதிய விதியின் படி, போட்டிக்காக இரு அணிகளின் தரப்பில் விளையாடும் 11 வீரர்கள் மற்றும் வெளியே அமர்ந்திருக்கும் 05 வீரர்கள் என மொத்தம் 16 பேரை தவிர்த்து வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்குள் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, பயிற்சியாளர்கள் தரும் தகவல்களை கடத்துவது உள்ளிட்ட பணிகளில் இனி மைதானத்திற்கு வெளியே உள்ள 05 வீரர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அத்துடன், அணியின் மற்ற உபரி வீரர்கள் மைதானத்திற்கு வெளியே உள்ள தங்களது இருப்பிடங்களில் மட்டுமே அமர வேண்டும் என்றும் பவுண்டரி எல்லை, மற்றும் மின்னணு விளம்பர பலகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நடமாடவோ, சுற்றித் திரியவோ கூடாது எனவும் பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதாவது, மைதானத்தில் தேவையற்ற ஆட்கள் நுழைவதைத் தடுக்கவும், ஆட்டத்தின் போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பிசிசிஐ இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.