'பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்தவர், இன்று பால் டாயில் பழனிசாமியாக மாறியிருக்கிறார்'; இபிஸை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின்..!
Seithipunal Tamil April 10, 2026 06:48 AM

வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது; 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக முதல் வெற்றி ஆயிரம் விளக்கு தொகுதியின் வெற்றியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, என்னை நேரடியாக கெட்ட வார்த்தை சொல்லிதான் பேசவில்லை என்றும், நான் என்ன சொன்னேன். நீங்கள் பாஜகவுக்கு மிகவும் அடிமையாக இருக்கிறீர்கள். பாஜக என்ன சொன்னாலும் கேட்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம். இப்படி இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் முக்கியம். நம்முடைய மாநில உரிமைகள் முக்கியம் என்று குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், முரட்டுத் தொண்டர்களைப் பார்த்துப் பார்த்திருப்போம். முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம். முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பாஜகவின், மோடியின் ஒன்றாம் நம்பர் முரட்டு அடிமை என்று சொன்னேன் என்றும், டெல்லிக்குப் போனால் நான்கு கார் மாறிப் போகிறீர்கள். முகத்தை மூடிக்கொண்டு வெளியில் வருகிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளைப் பற்றி யோசியுங்கள் என்று சொன்னேன் என்று அடுக்கடுக்காக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததையே மீண்டும் குறிப்பிட்டார்.

ஆனால், இதற்கு அவர், உதயநிதிக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது? எங்கு கேட்கிறார். உண்மைதான், எனக்குப் பெரிய அனுபவம் கிடையாது. பதவிக்காக யார் காலில் விழுந்த அனுபவமும் எனக்குக் கிடையாது. சங்கிக் கூட்டத்துக்குப் பயப்படுகிற அனுபவம் எனக்குக் கிடையாது. நான் என்றைக்குமே மக்களோடு மக்களாக இருப்பேன் என்று பேசினார்.

இதற்கு அவர் (பழனிச்சாமி) உதயநிதி பால் டாயில் சாப்பிட்டு எப்பொழுதோ செத்துப் போயிருக்க வேண்டும். ஏன் இங்கே இருந்து என் உயிரை வாங்குகிறார்? என்கிறார் என்று கூறுகிறார். எப்போதும் அவருக்குப் பால் டாயில் நினைப்பாகவே இருக்கிறது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்று இபிஎஸை சாடியுள்ளார். தற்போதே தேர்தல் முடிவு  அவருக்குத் தெரிந்திருக்கிறது. இத்தனை நாள் வரைக்கும் பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்தவர், இன்று பால் டாயில் பழனிசாமியாக மாறியிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.