காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
TV9 Tamil News April 10, 2026 08:48 PM

ஏப்ரல் 10, 2026: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மக்கள் மத்தியில் அவர் பேசாமல் சென்றது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலதாமதம் ஏற்பட்டதால் அவர் உரையாற்றாமல் சென்றார். அதேபோல், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து கீழிறங்கி சைக்கிளில் பிரச்சாரம் மேற்கொண்டதும் கவனம் ஈர்த்தது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்:

அந்த வகையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில், பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்றபடி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: “நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 10ஆம் தேதி காரைக்குடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்:

அதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை இருந்து தனியார் விமானம் மூலம் மதுரைக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி சென்றடைந்தார். அங்கு திரண்டிருந்த பெரும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்தார். இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து கீழிறங்கிய விஜய், சைக்கிளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் ஆர்ப்பரித்து உற்சாகம் வெளிப்படுத்தினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், குறுகிய தூரம் மட்டுமே சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி ரோடு ஷோ தொடர்ந்தார்.

பேசாமல் சென்ற விஜய்:

இந்நிலையில், காரைக்குடியில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், 12 மணி முதல் 2:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலதாமதம் ஏற்பட்டதால் அவர் பேசாமல் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இதனால் அப்பகுதி மக்களிடையே சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.