பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சித்திரை விஷு தரிசனம்
சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை நாளை ஏப்ரல் 11ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. வழக்கமாக சித்திரை ஒன்றாம் தேதி விஷு கனி தரிசனம் நடைபெறும். ஆனால், இந்தாண்டு சில சாஸ்திர கணக்குகளின் படி, சித்திரை 2ம் தேதி அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெறும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. வரும், 15-ம் தேதி அதிகாலையில், சூரியன் பங்குனி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்கு கடப்பதால் விஷு அன்றைய தேதிக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெறும். ஏப்ரல் 12 முதல் 18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்தின் சிறப்புகள்
விஷு நாளின் அதிகாலை, “விஷு க்கணி” எனப்படும் சிறப்பு அலங்காரம் காண்பது முக்கியம். மலர்கள், கனிகள், அரிசி, நாணயம், கண்ணாடி போன்றவை வைத்து அலங்கரிக்கப்பட்ட கணியை முதலில் காண்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என நம்பப்படுகிறது. இந்த நாளில் பெரியவர்கள் சிறுவர்களுக்கு “கைநீட்டம்” (பணம் அல்லது பரிசு) வழங்குவது ஒரு பாரம்பரியமாகும். இது செழிப்பையும் நலனையும் குறிக்கிறது. விஷு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், விரதம் இருந்து, எளிமையான வாழ்க்கையை பின்பற்றி, மன அமைதியுடன் சபரிமலையில் தரிசனம் செய்கிறார்கள். சபரிமலை விஷு தரிசனம் என்பது ஒரு சாதாரண வழிபாடு அல்ல. அது பக்தியின் உச்சமாகவும், ஆன்மிக புத்துணர்ச்சியை அளிக்கும் திருவிழாவாகவும் திகழ்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித தரிசனத்தை பெற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.