ஜன நாயகன்:``பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது சட்டப்படி குற்றம்" - KVN நிறுவனம் எச்சரிக்கை
Vikatan April 10, 2026 10:48 PM

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்தப் படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தை கடந்த ஜன.9-ல் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, படத்தை மறுஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. பட தணிக்கை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்

இந்த நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் சில நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``நான் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின்படி இந்தப் பொது அறிவிப்பை வெளியிடுகிறேன். எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

Jananayagan - ஜனநாயகன்

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Jana Nayagan - Vijay

ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜனநாயகன் படம் திரைக்கு வரவே வராதா? இதுவரை நடந்தது என்ன? விஜய், தன் மௌனத்தை உடைப்பாரா?

அதைத் தொடர்ந்து கே.வி.என் தயாரிப்பு நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``நாங்கள்,(KVN Productions LLP), விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் முழுமையான பதிப்புரிமை உரிமையாளர்கள் ஆவோம்.

இத்திரைப்படத்தின் சில முக்கியக் காட்சிகள் மற்றும் காணொளிகள் சில அடையாளம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, இணையதளங்களில் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது டிஜிட்டல் திருட்டு தொடர்பான ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகும்.

இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்:

  • வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் கசிந்த இந்த உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பிறருக்கு அனுப்புவது, பகிர்வது அல்லது பதிவேற்றுவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய மீறலாகும்.

  • இணையத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு டிஜிட்டல் செயல்பாட்டையும் தடயவியல் மூலம் கண்டறிய முடியும். இந்தக் கசிவில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அதனைப் பரப்பும் சங்கிலித் தொடரில் உள்ள அனைவரையும் கண்டறியும் விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

  • இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபர் மீதும் எந்தவித விதிவிலக்கும் இன்றி உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சட்டவிரோதமாகக் கசிந்த இத்திரைப்படத்தின் காட்சிகளை எந்த வகையிலும் பயன்படுத்தவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். அத்தகைய உள்ளடக்கத்தை நீங்கள் பெற்றால், அதைத் திறக்கவோ, சேமிக்கவோ அல்லது பிறருக்கு அனுப்பவோ வேண்டாம். அதனை உடனடியாக அழித்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மீறுபவர்கள் அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.