விஜய் பிரசாரத்தில் 'தல - தளபதி' மொமெண்ட் ... 'அஜித்' போட்டோ... கேட்டு வாங்கிய விஜய்!
Dinamaalai April 11, 2026 09:48 AM

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் களம் நாளுக்கு நாள் அதிரடியாகி வருகிறது. நேற்று காரைக்குடியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, ரசிகர் ஒருவர் கொடுத்த நடிகர் அஜித்தின் புகைப்படத்தை விஜய் ஆசையுடன் கேட்டு வாங்கிய சம்பவம், சமூக வலைதளங்களில் "நெருப்பு" போலப் பரவி வருகிறது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதால், புயல் வேகத்தில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தூத்துக்குடியில் மக்கள் வெள்ளத்தில் நீந்திய விஜய், இன்று காலை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரைக்குடி நோக்கி அவர் சென்றபோது, வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில், சாலையோரம் நின்றிருந்த தொண்டர் ஒருவர், நடிகர் அஜித்தும் விஜய்யும் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை வைத்திருந்தார். அதைக் கவனித்த விஜய், காரை நிறுத்தி அந்தப் புகைப்படத்தை ஆசையுடன் கேட்டு வாங்கினார். அதேபோல், மற்றொரு ரசிகர் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தைப் பரிசளித்தார். இந்த இரண்டு புகைப்படங்களையும் வாங்கிய விஜய், அவற்றைச் சில நிமிடங்கள் தனது கைகளிலேயே வைத்திருந்து ரசித்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துப் பகிர, அது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சமீபகாலமாகத் தேர்தல் பிரசாரக் களத்தில் அஜித்தின் பெயர் ஒரு 'மேஜிக்' போலப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் அதிமுகவினர் தங்களது பிரசாரப் பீரங்கிகளில் அஜித்தின் படத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறம், "அஜித் எனக்கு ஒரு நல்ல நண்பர்" என்கிற ரீதியில் தவெக தரப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற முயன்று வருகிறது.

அஜித் எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காத சூழலில், அவரது புகைப்படத்தை விஜய் வாங்கியது, "நிச்சயமாக இது அஜித் ரசிகர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு ராஜதந்திர நகர்வு" என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரசாரத்தின் ஒருபுறம் இவ்வளவு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தாலும், காரைக்குடி ரோடு ஷோவின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலால் ஒரு பெண் மயங்கி விழுந்ததும், சிலர் காயமடைந்ததும் நிர்வாகச் சீர்கேட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இருப்பினும், விஜய்யின் இந்த 'தல' பாசம், வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.