வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி... மருத்துவர்கள் சொல்வது என்ன? - தொண்டர்கள் அதிர்ச்சி!
Dinamaalai April 11, 2026 09:48 AM

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் கோவை மாவட்டத்தில் அனல் பறந்து வரும் நிலையில், கோவை வடக்குத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், வேட்பாளர் வாக்குசேகரிப்பில் ஈடுபடாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அத்தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கோவை வடக்குத் தொகுதியில் மீண்டும் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பில், வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாகத் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாகச் சென்று கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்ததால், அவருக்குக் காலில் கடுமையான வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வலியின் தீவிரம் அதிகமானதைத் தொடர்ந்து, நேற்று இரவு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் ஓய்வின்றி உழைத்ததே இந்த உடல்நல பாதிப்பிற்குப் பிரதான காரணம் எனக் கண்டறிந்த மருத்துவர்கள், "அடுத்த 48 மணி நேரம் அவர் கட்டாயம் முழு ஓய்வில் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர். காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைய ஓய்வு மிக அவசியம் என்பதால், அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் நடைபெறவிருந்த வானதி சீனிவாசனின் அனைத்துத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்திற்குத் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

வேட்பாளர் ஓய்வில் இருந்தாலும், தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும் என பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், அவரது ஆதரவாளர்களும், மகளிர் அணியினரும் வானதி சீனிவாசன் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.