உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஈரான் புதிய அதிரடித் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பயணிக்கும் கப்பல்களுக்கு இனி 'டிரான்சிட் கட்டணம்' வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டணங்கள் அதன் தேசிய நாணயமான ரியாலில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத் தலைவர் இது தொடர்பாகத் தெரிவித்துள்ளதாவது, கப்பல்களிடம் வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்தை ஈரானின் தேசிய நாணயமான 'ரியால்' (Rial) மூலமாகவே பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு நீண்ட கால அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமையும் எனத் தெரிகிறது. கப்பலின் வகை, சரக்கின் மதிப்பு மற்றும் அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, இந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்கள் முன்கூட்டியே உரிமம் மற்றும் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய சட்டகத்தை உருவாக்க ஈரான், ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது கடல் போக்குவரத்தைச் சீர்படுத்தவே தவிர, கட்டுப்படுத்த அல்ல என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரிபாபாடி விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது போர் பதற்றம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படை அவ்வப்போது கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் புகார்கள் உள்ளன. சில கப்பல்கள் கடந்து செல்ல ரகசியமாகப் பணம் செலுத்தப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈரான் வழியாக அதிகப்படியான எரிசக்தியை இறக்குமதி செய்யும் சீனாவிற்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. ஈரானுடன் நல்லுறவில் இருக்கும் சீனா, இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே சர்வதேச வர்த்தகத்தின் எதிர்காலம் அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் திடீர் கட்டண வசூல் திட்டம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தக்கூடும் என்பதால், உலக நாடுகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளன
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த 34 கி.மீ குறுகிய கடல் பாதை, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.எண்ணெய் மட்டுமின்றி, உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் இதன் வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன.