ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், வீரர்கள் அமரும் ‘டக் அவுட்’ பகுதியில் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிசிசிஐ (BCCI) விதிகளின்படி, ஊழல் தடுப்பு நடவடிக்கையாகப் போட்டி நடைபெறும் சமயத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் டக் அவுட் பகுதியில் செல்போன் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணியின் மேலாளர் அவசரத் தேவைகளுக்காக டிரஸ்ஸிங் ரூமில் மட்டும் போன் பயன்படுத்த அனுமதி உண்டு என்றாலும், மைதானத்தில் வீரர்கள் அருகிலேயே அவர் போன் பயன்படுத்தியது விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அருகிலேயே அவர் போன் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டி வரும் ரசிகர்கள், பிசிசிஐ இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விதிமீறல் தொடர்பாகப் போட்டி நடுவர் அல்லது ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி, ராஜஸ்தான் அணிக்கு அபராதம் அல்லது எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.