தகிக்கும் வெயிலில் கரும்பு ஜூஸ்: காஞ்சிபுரத்தில் தவெக வேட்பாளரின் நூதன பிரச்சாரம்!
கிஷோர் April 11, 2026 09:14 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் தேர்தல் ஜுரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர்.வீ. ரஞ்சித்குமார், தனது தொகுதியில் வாக்காளர்களைக் கவரப் புதிய மற்றும் நூதனமான முறைகளைக் கையாண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒளிமுகமதுபேட்டை பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்களோடு மக்களாக கரும்பு ஜூஸ் விற்பனை

ஒளிமுகமதுபேட்டை மின்சார வாரிய அலுவலகம் அருகே பிரச்சாரம் செய்தபோது, சாலையோரம் இருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடைக்கு வேட்பாளர் ரஞ்சித்குமார் திடீரென சென்றார். தகிக்கும் கோடை வெயிலால் சோர்ந்து போயிருந்த பொதுமக்களைக் கண்ட அவர், தானே கரும்பு ஜூஸ் பிழியும் பணியில் இறங்கினார். இயந்திரத்தில் கரும்புகளைக் கொடுத்து, சில்லென்று ஜூஸ் தயாரித்து அங்கிருந்த பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அன்புடன் வழங்கினார். தாகத்தைத் தணித்த கையோடு, கட்சியின் தேர்தல் அறிக்கையை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து, 'விசில்' சின்னத்திற்குத் தனது ஆதரவைக் கோரினார்.

தொண்டர்களின் எழுச்சியும் இருசக்கர வாகனப் பேரணியும்

வேட்பாளரின் இந்த எதார்த்தமான அணுகுமுறை அந்தப் பகுதியில் இருந்த மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்து பெரும் பேரணியாக வலம் வந்தனர். வழியெங்கும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவருக்குப் பொன்னாடை போர்த்தியும், மலர் மாலைகள் அணிவித்தும் தொண்டர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே உள்ள நிலையில், வேட்பாளரின் இந்த 'சில்' அணுகுமுறை காஞ்சிபுரம் தொகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.