தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த வானதி சீனிவாசன், கால்வலி மற்றும் வீக்கம் காரணமாக நேற்று தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். பின்னர் கோவையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், அவருடைய வலது காலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆனால், சிகிச்சையின் போது வழங்கப்பட்ட மருந்துகளால் ஒவ்வாமை ஏற்பட்டதால், அவர் நேற்று இரவு அவசரமாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் இருந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், வானதி சீனிவாசன் அடுத்த சில நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மற்ற நிர்வாகிகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் உடல்நல பிரச்சனை, அவரது ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.